பேச்சு 1:
வாழ்விற்கான உரையாடலைப் பழகுதல்:
கவனி, விசாரி, காதுகொடுத்து கேள், ஆதரவு கொடு, தொடர்ந்து கவனி.
மனநலம் பற்றி, தைரியமாக ஒரு உரையாடலை ஆரம்பிப்பது என்பது எளிதானதல்ல.அதன் அடிப்படைகளை நாம் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், அவற்றை நமக்குப் பழக்கமான, இயல்பான மொழியில் பயன்படுத்தி பயிற்சி செய்யாவிட்டால், நாம் அதை மறந்து விடுவோம்.
நமக்கு பரிச்சயமான பின்வரும் இந்த சூழலில் நாம் என்ன செய்வோம் என்று கற்பனை செய்து பார்க்கலாம்.
உதாரணமாக, உங்கள் குழுவில் ஒருவர், வேலை நேரத்திற்கு பின், மதுபானக்கூடத்திற்கு அதிகமாக போவதை நீங்கள் கவனிக்கிறீர்கள். அவர் எப்பொழுதும் பணிக்குச் சரியான நேரத்திற்கு வருவதில்லை. மேலும் எப்பொழுதும் அவர் கவனம் (பணியில் இல்லாமல்) வேறு எங்கோ இருக்கும்.
அவரிடம் ஏதோ சரியில்லை என்பதை நீங்கள் கவனித்ததாக கூறுங்கள். என்ன மாதிரி விசயங்களை நீங்கள் கூறுவீர்கள்? உங்கள் மற்ற குழுவினரிடமிருந்து 2-4 உதாரணங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.
எந்த விதத்திலாவது நீங்கள் உதவ முடியுமா என்று அவர்களை கேளுங்கள். உங்கள் மற்ற குழுவினரிடமிருந்து 2-4 உதாரணங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.
பணியாளர் உதவித்திட்டம் (ஈஏபி) மற்றும் ஆரோக்கிய பயிற்சியாளர், அவர்கள் நலமான மனநிலையை அடைய உதவும் வழிமுறைகளைக் கண்டறிந்து கூறி அவர்களுக்கு உதவ முடியும் என்று எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் அதை எவ்வாறு செய்வார்கள் என்று எடுத்துரைக்க சில உதாரணங்களை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
வேலை நேரத்திற்கு பிறகு, மது இல்லாத ஏதேனும் ஒரு பொழுதுபோக்குச் செயலில் அவருடன் நீங்கள் இணைந்து ஈடுபட சம்மதிப்பதாகக் கூறுங்கள். உங்கள் மற்ற குழுவினரிடமிருந்து 2-4 உதாரணங்களை கேட்டுக்கொள்ளுங்கள்
சில நாட்களுக்குப் பிறகு, அவர்களிடம் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரியுங்கள். எப்படி விசாரிக்கலாம் என்பதற்கான சில உதாரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் சுபாவத்திலோ நடவடிக்கையிலோ எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்றால் உங்கள் தலையீட்டை அதிகப்படுத்தவும். பணியாளர் உதவித் திட்டத்தையோ மனநலப் பணியாளரையோ
கலந்து ஆலோசியுங்கள்.
இது போன்ற சுலபமான உரையாடல் மூலம் செய்யும் தலையீடு, உயிரைக் காத்து, சக ஊழியர்களையும், நண்பர்களையும், குடும்பங்களையும் காப்பாற்ற உதவும். மனநலப் பிரச்சனைகளை (வெளிக்காயங்களுக்கு செய்வது போல்) ஒரு பிளாஸ்திரி கொண்டு சரி செய்ய முடியாது. ஆனால், சக மனிதர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஏதுவான தீர்வுகளை அவர்கள் கண்டறிய உதவ முடியும்.
கருவிப்பெட்டிப் பேச்சு #2
உலக தற்கொலைத் தடுப்பு தினம்: பிரதி ஆண்டு செப்டெம்பர் 10ம் தேதி.
கள மேலாளரின் கருத்துரைகள்:
இன்றைய தினத்தை நாம் தற்கொலைத் தடுப்பு தினமாக அங்கீகரித்து அனுசரிக்கிறோம். நம் பணியாளர்களின் பாதுகாப்பு நமக்கு மிக முக்கியம். தற்கொலை என்பது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மிகப்பெரிய பிரச்சனை. தற்கொலைக்கு ஒருவரை இட்டுச்செல்லும் அவரது வலி்யும் வேதனையும், பிறரால் கற்பனை செய்து உணரமுடியாது . அவர்களது மரணம் அவர்களது குடும்பத்தையும், நண்பர்களையும் துயரத்தில் ஆழ்த்துவதோடு, சமூகத்தின் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உலகெங்கும், ஆண்டொன்றுக்கு, 800,000 பேருக்கு மேல் தற்கொலையால் மரணிக்கிறார்கள். இது சுமார் 40 வினாடிகளுக்கு ஒரு மரணம் என்ற விகிதத்தில் நடைபெறுகிறது.
போரினாலும், கொலைக்குற்றங்களினாலும் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட தற்கொலையால் ஏற்படும் உயிரிழப்பு அதிகம்,
மனநலச் சவால்கள் (குறிப்பாக, மனசோர்வு மற்றும் குடிப்பழக்கம்) தற்கொலைக்கான முக்கிய, ஆபத்தான காரணிகளாகும். உலக தற்கொலை தினம், தற்கொலைத் தடுப்பில் ஆர்வம் உள்ள நிறுவனங்கள், மற்றும் தனி நபர்களை ஒன்று சேர்த்து, உயிர்களை காக்கும் முயற்சிகளை அணிதிரட்டுகிறது.
தொடர்பில் இருத்தல் என்பது தற்கொலை எண்ணம் இருப்பவர்களுக்கு இன்றியமையாதது. தனிமை தற்கொலைக்கான வாய்ப்பை அதிகரிக்கும் அபாயம் கொண்டது. நல்ல உறுதியான மனித உறவுகள் தற்கொலையிலிருந்து ஒருவரை காப்பற்ற முடியும். பிறரிடமிருந்து விலகி தனிமையில் இருப்பவர்களை அணுகி, அவர்களுக்கு நட்பும் ஆதரவும் அளிப்பது உயிர் காக்கும் செயலாகும்.
உலக தற்கொலைத் தடுப்பு தினம் பற்றி மேலும் விவரங்களுக்கு: iasp.info/wspd